இந்தியாவில் தனக்கான அடையாளத்தையும், தனது அரசியல் தளத்தையும் வலுப்படுத்துகிற வகையிலும், அதே சமயம் வலதுசாரி இந்துத்துவ கோட்பாடுகளுக்கு பெரும்பான்மை உணர்வூட்டும் விதமாக திட்டமிட்ட சர்ச்சைக்குரிய விவாதங்களையும், முரண்பட்ட சூழலையும் 2014 ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்திற்கு பிந்தைய இரண்டு ஆண்டுகளில் RSS
ம் அதன் அரசியல் பிரிவான பிஜேபி ம் உருவாக்குவதை தனது செயல்வழக்கமாகக் கொண்டுள்ளனர் .அதன் ஒருபகுதியாக, தங்களின் நீண்டகால நிகழ்ச்சி நிரலான சங்பரிவாரம் குறிப்பிடுகிற சரஸ்வதி நதியின் இருப்பை நிரூபிப்பதாகும். அத்தகைய முயற்சியானது மண்ணியல் நிபுணர் வால்டியா தலைமையிலான குழு கண்டறிந்துவிட்டதாகவும் ,இனிமேலும் யாராலும் சரஸ்வதி நதி இந்தியாவில் இருந்ததை மறுக்க முடியாது எனவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் செல்வி உமா பாரதி கடந்த அக்டோபர் 16 அன்று பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.
புராண காலத்தில் இருந்ததாகவும், ரிக் வேத கால இலக்கியங்களிலும், உபநிடதங்களில் எடுத்தாளப்பட்ட சரஸ்வதி
நதியைக் கண்டறிவதற்காக மத்திய அரசானது இந்திய மண்ணியல் நிபுணரும், ஜவகர்லால் நேரு அறிவியல் ஆய்வு மையத்தினை சேர்ந்த கே எஸ் வால்டியா தலைமையில் தொல்லியல் துறை வல்லுநர்கள், நீரியல் விஞ்ஞானிகள் உள்ளடக்கிய 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை
ஹரியானா மாநில பிஜேபி அரசின் நிதிநல்கையோடு சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க 2016 ம் ஆண்டின் முதல் காலாண்டில் நியமித்தது. இக்குழுதான் கடந்த 6 மாதங்களாக வடமேற்கு மாநிலங்களான ஹரியானா,ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் வடக்கு பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டு ,அதுகுறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை கடந்தவாரம் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
தொடந்து சரஸ்வதி நதி இந்தியாவில் ஓடியது குறித்த ஆய்வினை
இந்திய வரலாற்று அறிஞர்கள் மறுத்து வருகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட
வேண்டியது இங்கு அவசியமாகிறது.
ராமாயணம்,மஹாபாரதம் போன்ற இதிகாசங்களை மையப்படுத்தி , வரலாறை இந்துத்துவ கருத்தியலுக்கு ஏற்ற
வரலாறாக திருத்தியமைக்கிற பணி
RSS நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக இருக்கிற சூழலில், மத்திய அரசு நியமித்த குழு கண்டறிந்தது சரஸ்வதி நதிதான் என்று இதிகாசத்தில் குறிப்பிட்டதை மெய்ப்பிக்க முயலுவது வரலாற்று முறைமையியலுக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின் நான்காவது பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல்பூர்வமான
மனப்பான்மையை வளர்த்தெடுக்கவேண்டும் என்ற வழிகாட்டலுக்கு முரண்பாடாக தேசத்தின் மத்திய அமைச்சர் உமா பாரதி சரஸ்வதி நதிதான் என உறுதிபட சொல்வதை ஆராய்ந்து பார்க்க வேண்டியதாகிறது.
இமயமலையில் தோன்றும் “சரஸ்வதியானது” இந்தியாவில்
மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை அதாவது 3000 கிலோமீட்டர் நீளத்தையும், பாகிஸ்தானில் மூன்றில் 1 பங்கு தூரத்தையும் அதாவது 1000 கிலோமீட்டர் என ஏறத்தாழ 4000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மேற்கு கடலில் கட்ச் வளைகுடாவின் வழியே கலக்கிறது. இமயமலையில் தோன்றும் கால்வாய் ஆனது கிழக்கு மேற்காக இரண்டாக
பிரிந்து சென்றதாகவும், மேற்குமுகமாக
சென்றதுதான் சரஸ்வதி நதியென
பெயர்சூட்டிருக்கிறார்கள்.
கடந்த 6 மாத காலத்தில், மத்திய அரசு அமைத்த 7 பேர்
குழுவானது இந்தியாவின் வட-மேற்கு மாநிலங்களில் இமயமலை பகுதி, ஹரியானா ,ராஜஸ்தான், குஜராத்தின் வடக்கு பகுதியில் அகழ்வாய்வு நடத்தியதெல்லாம் உண்மைதான். ஆனால் அவர்கள்
எந்த ஆதாரத்தை வைத்து கண்டகழ்ந்தது சரஸ்வதி என்ற முடிவுக்கு வந்தார்கள் என்பதே இடதுசாரி வரலாற்று ஆய்வாளர்கள்,முற்போக்குவாதிகள் முன்னிறுத்தும் கேள்வியாகும்..
திரிவேணி சங்கமத்தின் அங்கங்களான கங்கை, யமுனை நதிகள் இருக்கிறபோது புராண சரஸ்வதியை மெய்ப்பிப்பதற்க்காக பாஜக
அரசு மேற்கொண்ட ஆய்வினை வழிநடத்திய பத்மபூஷன் விருதுபெற்ற திரு கே எஸ் வால்டியா அவர்கள் என்ன சொல்கிறார் என்பதை உற்றுநோக்க வேண்டியுள்ளது.
1) ஆய்வு நடந்த
6 மாதகாலத்தில் தற்போதிருக்கிற காக்கர்(Ghaggar), ஹக்ரா(Hagra) ,சரசுத்தி(Sarsuti) , நாரா (Nara) போன்ற நதிகளுடன் தொடர்புடைய தனித்த தொன்ம கால்வாய் ஒன்று குறுக்கே வந்தது என தெரிவித்துள்ளார்.
2) வரலாற்று ரீதியாக 1700 சிறிய மற்றும் பெரிய கிராம,நகரங்கள் தொன்ம கால்வாயின் இருபுறங்களிலும் அமைந்திருந்தன. இந்த நகர, கிராமங்கள் 5500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சில
நகரங்கள் 100 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மிகாமல் இருந்தது. அப்படியிருக்கையில், இந்த நகரங்கள் தண்ணீர் இல்லாமல் ஜீவித்திருப்பது எப்படி சாத்தியமாகும்? இந்த தொன்மைக்கால்வாய்
தான் இந்த நகர கிராமங்களுக்கு நீர் ஆதாரத்தை வழங்கியிருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
4) இந்தக்குழு
6 மாத ஆய்வின்போது வண்டல்மண் குவியல்களை அதன் வடிவம், இயல்புகளின் அடிப்படையில் ஆய்வு செய்கையில் மிகப்பெரிய நதித
ஒன்றுதான் இதனை கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும்
என்பதை வெளிப்படுத்தவும் வகையில் உள்ளது. இவையனைத்தும் தற்போதிருக்கின்ற காக்கர்(Ghaggar), கங்கை, யமுனை நதிகளில் ஒன்றை நினைவுபடுத்துவதாக உள்ளது.
5)ஆய்வு நடந்த பல பகுதிகளில், தொன்மைகால்வாய்களில் இருந்து
சேகரிக்கப்பட்ட கனிமங்கள் மற்றும் இமயமலையின் உயரம் நிறைந்த ,குறைந்த பகுதிகளில்,சட்லஜ், யமுனா போன்ற நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கனிமங்களும் ஸோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இரண்டு பகுதி கனிமங்கள் மற்றும் வேதியியல் கூறுகள் ஆகியன , இமயமலையில் உற்பத்தியாகிற சரசுத்தி,ஹக்ரா, காக்கர் மூலம் தான் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நதி ஓடியிருக்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, இது எந்த நதி என்பதையும் ,இதன் பெயர் என்ன என்பதையும் என்பனவற்றை நாங்கள் ஆய்வு செய்து கண்டுபிடிப்போம் என மண்ணியல் நிபுணர் வால்டியா
தெரிவித்துள்ளார்
இதுவரை மண்ணியல் நிபுணர் என்ற அடிப்படையில் அகழ்வாய்வில் வெளிக்கொணர்ந்த தரவுகளை பட்டியலிட்ட திரு வால்டியா அவர்கள், சரஸ்வதி என்ற வார்த்தை, ஹரியானா மாநில மக்களிடையே அதிகமா புழக்கத்திலிருக்கும், மிகவும் பிரசித்தி பெற்றதான, மற்றும் மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் பலன்களுக்கு பெயரிடப்பட்டுள்ளதாலும், மாநில வருவத்துறை பதிவேடுகளில் குறிப்பிடப்படுவதால்
இந்த நதியின் பெயரானது சரஸ்வதியாகத்தான் இருக்குமென பரிந்துரைக்கிறார். ஒரு பெயர் மீண்டும் மீண்டும் ஒரு பிராந்தியத்தில் உள்ள மக்கள் திரளால் உச்சரிக்கப்பட்டது என்பதற்காகவே ஒரு
நதிக்கு பெயர் சுட்டிட முடியுமா?
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலாம் ஆட்சிக்காலத்தின் போது வட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, குதிரை உருவம் பொரித்த முத்திரைகள் கிடைத்ததாக வெளிக்கொணரப்பட்டு , அம்முத்திரை சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்டதாக சொன்னார்கள்.. ஆனால்,
அதன் உண்மையான பின்புலத்தை கண்டுபிடிக்கவேண்டுமென வெளிநாட்டில் ஆய்வுகளுக்கு உட்படுத்துகிற போது அம்முத்திரை போலியானது என உறுதி செய்யப்பட்டது. இப்போது தொன்ம நதி ஒன்றை கண்டுபிடித்துவிட்டு சரஸ்வதி என்று சொல்வதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நம்புவது. கி.மு
2000 ல் வேதங்கள் எழுதப்படுவதற்கு முன்பே சிந்து சமவெளி நாகரீகம்
கி.மு
3300 ல் சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது.ஆனால், சரஸ்வதி மிக பரந்த அளவில் இங்கே பாய்ந்து கொண்டிருந்த போது ஹரப்பா நாகரிகத்துடன் ஓரினமான மக்கள் வேதத்தை எழுதி, ஹரப்பா மற்றும்
மொஹெஞ்சதாரோ நகரங்களை உருவாக்கி வாழ்ந்தனர் என்று முன்பு கோரினார்கள். அதன்படி , இந்த நாகரீகம் சிந்து-சரஸ்வதி நாகரீகம் என பெயர் மாற்றப்படவேண்டுமென 1996 ல் வரலாற்று ஆய்வாளர் எஸ்.பி.
குப்தா பரிந்துரைத்தார்.
சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முற்பட்ட பண்பாடு எதுவும் இந்தியாவில் இல்லை என்பதை ஏற்கனவே நடந்துள்ள அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்த பின்னரும் கூட, வரலாற்று ஆய்வு முறைமையியலை நிராகரித்துவிட்டு, புராணத்தை அடிப்படையாகக் கொண்ட மகாபாரத்தைதை நாகரீகமாக மறுகட்டமைக்க முயலுவது என்பது தன் வலதுசாரி அரசியல் தத்துவத்திற்கு ஏற்றாற்போல் வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியாகும். சிந்துவெளிப் பகுதியில் கி.மு
6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பா இக்கூற்றுக்கான சான்றுகளாகும். தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம், முன்னெப்பொழுதும் இல்லாத வகையில்
அக்காலத்து வேறெந்த நாகரிகத்திலும் பார்க்க அளவிற் பெரிதாக சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் (5 இலட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக
வளர்ந்திருந்தது. மேலேகண்ட தொன்ம நதிதான் சரஸ்வதி என்றும், ஒருகாலத்தில் வட-மேற்கு இந்தியாவின் ஜீவநாடியாக திகழ்ந்த இந்நதி மகாபாரத காலம் முதல் ஹரப்பா காலம் வரையிலான ஒரு விரிந்த தொடர்
நாகரீகத்தில் தழைத்தோங்கியதாக முன்மொழிந்துள்ளார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி.
2002 ல், புகழ்பெற்ற இடதுசாரி வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர் அவர்கள், சாவர்க்கர் மற்றும் கோல்வால்கர் ஆகியோரின் பார்வையிலான இந்தியா வரலாற்றின் துவக்கமானது ஆரியர்களால் உருவாக்கப்பட்டது என்கிற இந்துத்துவ வரலாற்றை கட்டமைக்க
இக்கருத்து
ஆதரவாக இருக்கிறது என்கிறார்.
இன்னும் அரசுத்தரப்பில் கே எஸ் வால்டியா தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை முழுமையாக பரிசீலிக்காத சூழலில் மத்திய அமைச்சர் வெளிப்படுத்தும் செய்தியானது இந்துத்துவ அரசியலை வழிமொழிந்ததாக உள்ளது. அறிவியல்பூர்வமான வரலாற்று ஆய்வுகளின் வழியில்
மெய்ப்பிக்கப்படும் முடிவுகளை பின்பற்றுவதே இந்திய தேசத்தின் வரலாறாக இருக்கும்.
அறிவியலை மறுத்து புராணத்தில் இருந்த புஸ்ப விமானத்தை ஆகாயவிமானமாக மாற்றியவர்கள், வரலாற்றை மறுத்து இதிகாசத்தை இந்திய வரலாறாக்க முயலுகிறார்கள்...வரலாறை பாதுகாப்போம்
-
- கே. எம் பாரதி
ஆய்வு மாணவர், மதுரை காமராஜர் பல்கலைகழகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக