விடைதாள்களின் விபரீதங்கள்
மார்ச்,ஏப்ரல் தேர்வுகளின் முடிவுகளுக்காக மே காத்திருந்தது போல 10,+2 க்கு முடிவுகள் வந்துவிட்டன.முதல்தர மதிப்பெண் பிடித்த மாணவ-மாணவிகளின் புகைப்படங்கள் வசந்தம் வீசும் புன்னகையோடு நாளேடுகளில் அலங்கரிக்கின்ற்போது,மறுபுறம் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்காக ஆசிரியர் சமூகம் பலிவாங்கப்படுகிற இன்னொரு செய்தியும் பிரசுரிக்கப்பட்டு கல்வித்துறையின் நடவடிக்கைகள் நியாயம் கற்ப்பிப்பது போல நடிக்கின்றன. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்த நிலையில் பரப்பான செய்தியாக பேசப்பட்டது தேர்ச்சிவிகிதம் குறைந்ததற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை,2 தலைமையாசிர்கள் சஸ்பெண்ட் என முதன்மைக் கல்வி அலுவலரின் நடவடிக்கை பாய்ந்தது தான். யதார்த்தம் என்னவெனில் ஆசிரியர் சமூகத்தை மட்டும் குற்றம் சொல்வது நியாயமன்று. எல்லாவிதப் பிரச்சினைகளுக்கும் மூலநதியாய் இருப்பது அரசும்,அரசில் அங்கம் வகிக்கின்ற ஆட்சியாளர்களும் தான்.பள்ளியில் சான்றிதழ் பெறுவதையே நோக்கமாகக்கொண்ட தேர்வுமுறையில் பாதிக்கப்படுவது ஆசிரியரும்,மாணவரும் தான்.
கல்வியைப் பற்றி விவாதிக்கிற போது ஒட்டுமொத்த சமூகத்தைப் பற்றி விவாதிக்கின்ற என்ற எண்ணம் வேண்டும் என கல்வியாளர் பாவ்லோ பிரையரே குறிப்பிடுவார். ஆனால் தமிழகத்தில் கல்வியைப் பற்றி விவாதிக்கிறபோது அரசுப்பள்ளிகளின் அவலநிலையும்,தனியார்ப்பள்ளிகளின் கட்டணக்கொள்ளையும் தான் விவாதங்களில் இடம்பெறும். வீதிவீதியாக விளம்பரங்கள், பெற்றோர்களை கவருகிற ஆங்கில மோகம்,இதர வகுப்புக்கள்,எல்லவற்றிற்கும் மேலாக தரம் என்ற வார்த்தை இவைதான் இன்றைய கல்வி வியாபாரத்தின் சூட்சமமாக இருக்கிறது.மறுபுறம் அரசுப்பள்ளிகளோ தனியார்மையத்திற்கு போட்டியாக எந்தவித முனைப்பும் காட்டமுடியாமல் வேடிக்கை பார்க்கும் கண்டும் காணாத இடமாக மாறியுள்ளன. தரம் என்ற வார்த்தைக்குப் பின்னால் ஒளிந்துகிடக்கின்ற பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்கிற ஆங்கிலமும்,அதன் அடிநாதமாக விளங்குகிற மனப்பாடக்கல்வியும் தான்.விஜயதசமி பண்டிகையைக்கூட நிதி கறக்கின்ற நிகழ்வாக மாற்றிவிட்டார்கள் தனியார்பள்ளி முதலாளிகள். குறைவான சம்பளம் வாங்குகிற அனுபவம் குறைவான ஆசிரியர்களைக்கொண்டு பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்யவைத்து மாணவ-மாணவிகளை இயந்திரகதியாக்குகிற மதிப்பெண்களால் எடை போடுகிற தவறான நடைமுறைதான் தனியார்ப்பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. இத்தகைய தவறான நடைமுறைதான் காலிப்பணியிடங்கள் நிறைந்த அரசுப்பள்ளிகளை மோசமென சொல்லச்சொல்கிறது.
தபால்நிலையங்களில் இந்தியில் எழுதினால் கூட கருப்பு வண்ணம் பூசுவோமென எச்சரிக்கை பாடி 1967 ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க-ம்,அதன் தொப்புள்கொடி உறவான அதிமுக-ம் தான் தமிழகத்தை (1) மாறிமாறி ஆட்சி செய்துவருகிறன.ஆனால் ஏழை,எளிய,சாமான்ய வீட்டுப்பிள்ளைகள் பயில்கிற அரசுப்பள்ளிகளை அவலங்களின் ஆலயமாக மாறியதற்கும்,ஆங்கிலவழிக் கல்வி செழித்து தமிழகத்தில் தனியார் காசு பார்க்கவும் இவர்களே காரணம். 1970-களில் தமிழகத்தில் பள்ளிக்கல்விக்குள் தனியாரை அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டு சிறுமுதலாளிகளும்,நிலவுடைமையாளர்களும் பள்ளிகளில் முதலீடு செய்யத்துவங்கினர். முப்பது ஆண்டு நிறைவு பெற்ற 2001 ல் தனி இயக்குனரகம் துவங்கும் அளவுக்கு தனியார்ப்பள்ளிகள் உயந்ததன.இந்த காலகட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட அரசாங்கப்பள்ளிகள் எண்ணிக்கை சொற்பமே.காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை.பள்ளிகளை காலத்திற்கு தகுந்தாற்போல் முன்னேற்றவும் தி.மு.க-அ.தி.மு.க அரசுகள் ஏற்பாடுகள் செய்யவில்லை.
இன்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் குறைந்தபட்ச அடிப்படைவசதிகள்கூட கிடையாது. 50% பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை.80% பள்ளிகளில் கழிப்பறைவசதி இல்லை. கழிவறை உள்ள 70% பள்ளிகளில் பயன்பாடற்று கிடக்கிறது.போதுமான வகுப்பறை,ஆய்வகம்,விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத 52% பள்ளிகள் நமது தமிழகத்தில்தான் இருக்கின்றன. அடிப்படைவசதிகளில் எவ்விதத் தகுதியுமற்ற இப்பள்ளிகளில்தான் காலந்தோரும் கற்ப்பிக்கப்படுகிறது சுத்தம் சோறுபோடுமென்று.பல்லயிரக்கணக்கான ஆசிரியர்,அலுவலர்,உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. இலவச மடிக்கணினி கொடுப்பதால் மட்டும் நிலைமை மாறாது.இது ஒருபுறமிருக்க புதிய பள்ளிகளையே திறக்கக்கூடாதென்ற முடிவில் இருக்கின்ற தமிழக அரசு 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கப்போவதாக அறிவித்துவிட்டு தாய்மொழிக்க்ல்விமுறைக்கு கல்லறைகட்டுகிற வகையில் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்விமுறையை செயல்படுத்தியது.பள்ளிகளைத் தரம் உயர்த்துவதாகக்கூறி அறிவிப்புக்களை வெளியிட்டது.பெயரில் மட்டுமே உயர்ந்திருக்கின்ற இப்பள்ளிகளில் எந்தவிதக்கட்டமைப்புவசதியும் கிடையாது.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. மாறாக தமிழகத்தில் அ.தி.மு.க அரசு 4 ஜோடி சீருடைகள்,10 ம் வகுப்புவரை பயிலும் மணவர்களுக்கு காலணிகள்,உலகவரைபடங்கள்,நோட்டுக்கள்,புத்தகப்பைகள்,ஜியாமெற்றிக் பாக்ஸ், மாணவிகளுக்கு நாப்கின் வழங்குவது(கழிப்பறை வசதியே பல பள்ளிகளில் இல்லை) என அரசு அறிவித்தது. அரசின் அறிவிப்பு ஓட்டைப்பானையில் தேனைச் சேர்த்து வைப்பதற்கு சமம். மேலேகண்ட குறைகளை பூர்த்திபண்ணாமல் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் தமிழகப்பள்ளிக்கல்வியில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.இத்தகைய குறைபாடோடு அரசுப்பள்ளி காணப்படுவதால்தான் கடந்த 14 ஆண்டுக்கும் மேலாக தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணம். (2)
என் மாநிலத்திலுள்ள ஏழைக்குழந்தைகள் அனைவரும் படிக்க, இலவசக்கல்வி கொடுப்பதால் வருகின்ற நிதிச்சுமையைத் தடுத்திட, தேவைப்பட்டால் மக்க்ளிடம் துண்டு ஏந்தி பிச்சை எடுத்தாவது படிக்கவைப்பேன் என்று கல்வி குறித்து அக்கறைப்பட்ட காமராஜர் பிறந்த தமிழகத்தில்தான் இந்த நிலை. வயது,கற்கும் திறன்,ஆர்வம் ஆகிய மூன்றின் அடிப்படைகளுக்கும்முற்றிலும் மாறாக அமைந்துள்ள சுமைகூடிய கல்விமுறையை சீர்திருத்துவதே இன்றைய தேவை.பேரா.யஷ்பால் குழுவும்,அதன் மீதான தமிழக அரசின் குழுவும் நடைமுறைபடுத்தவேண்டிய பரிந்துரைகளை வழங்கியுள்ளன.இந்திய தேசத்திற்கு எண்ணிலடங்கா வல்லுனர்களை பல்துறைகளுக்கு அர்ப்பணித்த அனுபவம் இரண்டாம் கருவறையாக திகழ்கின்ற தமிழக அரசுப்பள்ளிகளுக்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.நாம் சொல்லிய வண்ணமாக செயல்படட்டும் தமிழ்நாடு அரசு.
(3) - கே.எம்.பாரதி, இந்திய மாணவர் சங்கம்,
விருதுநகர் மாவட்டக்குழு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக